பெரம்பலூரில் அரசு கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக நிலம் கொடுப்பது போல் கொடுத்து, தங்களால் வளைக்கப்பட்ட நிலத்தின் மதிப்பை உயர்த்திக் கொண்டதாக, ராஜாவின் குடும்பத்தினரால் நடத்தப்படும் அறக்கட்டளை மீது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
பெரம்பலூரைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் குடும்பத்தினரால், அவரது தந்தை மற்றும் தாய் பெயரில் ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலை உறுப்பு கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் ஆகியன அமைக்க இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. அந்த நேரத்தில், ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை மூலம், அரசு கல்வி நிறுவனங்களுக்கு, தானே இடம் கொடுப்பதாக ராஜா அறிவித்தார். அதன்படி பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள குன்னம் ஒதியம் பிரிவு ரோட்டில் 30.28 ஏக்கர் நிலம் இலவசமாக, ராஜாவின் குடும்ப அறக்கட்டளையால் வழங்கப்பட்டது. அதேபோல், குரும்பலூரில் பாரதிதாசன் பல்கலை கலை, அறிவியல் உறுப்பு கல்லூரி கட்ட 8.5 ஏக்கர் நிலத்தையும், ராஜாவின் சொந்த ஊரான வேலூரில் அரசு பாலிடெக்னிக் கட்ட ஏழு ஏக்கர் நிலத்தையும் ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை மூலம், முன்னாள் அமைச்சர் ராஜா வழங்கினார். இதன் மூலம், மாவட்ட மக்கள் மத்தியில் ராஜாவுக்கும், அவரின் குடும்பத்தார் மீதும் செல்வாக்கு அதிகரித்தது. அரசு கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக ஏக்கர் கணக்கில் நிலம் வழங்கியதால், கட்சியிலும் ராஜாவின் செல்வாக்கு அதிகரித்தது. அரசு கல்வி நிறுவனங்களுக்கு இலவச நிலம் வழங்கியது, தன் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களின் மதிப்பை உயர்த்திக் கொள்ளவே என்பதை தற்போது பலரும் கூறுகின்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (மார்க்சிஸ்ட்) பெரம்பலூர் மாவட்ட செயலர் செல்லத்துரை: ராஜா, தன் பெற்றோர் பெயரில் நடத்தி வரும் ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை மூலம் குரும்பலூர், ஒதியம் பிரிவு ரோடு, மேலூர் ஆகிய இடங்களில் 400 ஏக்கர், 500 ஏக்கர் நிலத்தை, ஏக்கர் 25 ஆயிரம் முதல் மூன்று லட்ச ரூபாய்க்குள் வாங்கினார். தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தான் நிலம் வாங்கிய பகுதிகளில் இலவச நிலம் தருவதாக கூறி, மருத்துவக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கொண்டு வந்தார். இதன்மூலம் கட்சியிலும், மக்கள் மத்தியிலும் தன் இமேஜை உயர்த்திக் கொண்டார். ஆனால், அவர் அரசுக் கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக நிலம் கொடுத்த இடங்களில் தற்போது, ஏக்கர் 10 லட்சம் முதல் 15 லட்ச ரூபாய் வரை மதிப்பு உயர்ந்துள்ளது.
அறக்கட்டளை பெயரில் வாங்கிய நிலத்தில் மிகக்குறைந்த அளவு நிலத்தை இலவசம் என்ற பெயரில் கொடுத்து, அந்த இடத்தின் மதிப்பை பலமடங்கு உயர்த்தி ராஜா, "ராஜதந்திரமாக' செயல்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அவர்களின் அறக்கட்டளைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, அங்கு அரசுக் கல்வி நிறுவனங்கள் வருவது தெரியாது. கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு தற்போது ஏமாந்துபோய் நிற்கின்றனர். லாபநோக்கமின்றி நிலத்தை ராஜா வாங்குவது என்றால், அப்போதே விவசாயிகளிடம் கல்வி நிறுவனங்கள் வருவது பற்றி திறந்த மனதுடன் சொல்லியிருக்க வேண்டும். தற்போது குரும்பலூரில் அறக்கட்டளைக்கு சொந்தமாக 350 முதல் 400 ஏக்கர் நிலமும், மருத்துவக் கல்லூரி அருகே 600 ஏக்கர் நிலமும், பாலிடெக்னிக் அமையவுள்ள இடத்தில் 350 ஏக்கர் நிலமும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த இடத்தில் பல ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்றும், மீதியுள்ள நிலத்தை தங்களின் கைவசம் வைத்தும் உள்ளனர். இங்கெல்லாம் நிலம் வாங்க உதவிய அரசு அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் கூட, 50 முதல் 100 ஏக்கர் வரை நிலம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது, என்றார். இப்பிரச்னைகளை முன்வைத்து பெரிய அளவில் போராட்டத்துக்கு விவசாயி சங்கங்கள் தயாராகி வருகின்றன
***** thanks for dinamalar ******
0 comments:
Post a Comment