இன்று நம் வீட்டிலும், நாட்டிலும் குறைந்து வரும் ஒரு நற்குணம் ஒற்றுமை. மொத்த மக்கள் தொகையில், கூட்டுக்குடும்பம் என 10 சதவீதம் இருந்தால் கூட அது அதிகம் தான்.
பழைய கதை ஒன்று...ஆனாலும், பசுமையாய் நினைவில் நிற்கும் கதை.
ஒரு வீட்டில், நான்கு சகோதரர்கள் இருந்தனர். தந்தையோ பெரும் பணக்காரர். பிள்ளைகள் சொத்துக்காக அடித்துக் கொண்டார்கள். இதன் காரணமாக ஆளுக்கொரு வீட்டிற்கு குடிபோய் விட்டனர்.
பெரியவருக்கு பெரும் வருத்தம். தான் <உயிருடன் இருக்கும்போதே இப்படி என்றால், தன் காலத்துக்குப் பிறகு, இன்னும் நிலை மோசமாகி விடுமே என கவலைப்பட்டார்.
ஒருநாள், பிள்ளைகளை அழைத்தார். அவர் முன்னால், ஒரு விறகுக்கட்டு கிடந்தது.
மூத்தவனை அழைத்து,""இந்த விறகு கட்டை ஒடி,'' என்றார். கட்டாக இருந்ததால், அதை அவனால் ஒடிக்க முடியவில்லை. தன்னால் முடியவில்லை என கீழே போட்டு விட்டான்.
அடுத்த இரண்டு சகோதரர்களையும் இதே போல செய்யச் சொன்னார். அவர்களாலும் அந்தக் கட்டை ஒடிக்க முடியவில்லை.
கடைசி மகனை அழைத்தார். அந்தக் கட்டில் ஒரு விறகை மட்டும் எடுத்து ஒடிக்கச் சொன்னார். சடக்கென ஒடிந்தது.
""பார்த்தீர்களா! விறகு கட்டாக இருந்த போது, அதை ஒடிக்க முடியவில்லை. தனியே பிரித்ததும் எளிதாக ஒடிந்து விட்டது. நீங்களும் ஒற்றுமையாக இருந்தால், இந்த ஊரில் உங்கள் செல்வாக்கை அழிக்க யாராலும் முடியாது. பிரிந்திருந்தால், ஆளுக்கொன்றாக சொல்லிக் கொடுத்து, உங்களிடையே பகையைப் பெரிதுபடுத்தி, இருக்கிற பணத்தையெல்லாம் அழிக்கும் வழியைச் செய்து விடுவார்கள். எனவே, நீங்கள் ஒற்றுமையாய் இருக்கும்
வழியைப் பாருங்கள்,'' என்றார்.
அந்த சகோதரர்கள் மீண்டும் ஒன்றுபட்டனர். தங்கள் பிள்ளைகளுக்கும் ஒற்றுமையாய் வாழ்வதன் அவசியத்தை கற்பித்தனர். அந்தக் குடும்பம் வாழையடி வாழையாய் தழைத்தது.
இன்று வீடுகளில் சகோதர, சகோதரிகளே ஒன்றோ இரண்டோ தான்...அவர்களும் பிரிந்து கிடந்தால்... சிந்தியுங்களேன்!
0 comments:
Post a Comment